Monday, May 11, 2015

ஜெ. விடுதலை..! வடிவேலு அதிர்ச்சி…! – எலி பட விழாவை ரத்து செய்தார்…!

ஆளும்கட்சிக்கு காவடி தூக்குவதை பார்ட் டைம் வேலையாகவே செய்து வருகின்றனர் – படத்துறையினர்.

தமிழ்த்திரையுலக அமைப்புகளோ ஒருபடி மேலேபோய், அ.தி.மு.க. அமைச்சர்களை மிஞ்சம்வகையில் ‘அம்மா புராணம்’ பாடுவதையே முக்கிய கடமையாக செய்து வருகின்றன.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டதும் படத்துறையினரிடம் பதட்டம் தொற்றிக்கொண்டது.

தீர்ப்பு வெளியாகும் தினத்தில்… அதாவது இன்று… திரையுலகில் எவ்வித கொண்டாட்டமும்… விழாவும் நடைபெற்றுவிடாதபடி மிக கவனமாக இருந்தனர்.

அப்படி ஏதும் நடந்தால் அம்மாவின் கோபத்துக்கு ஆளாக நேரும் என்ற அச்சத்தில் தீர்ப்பு தேதி அறிவிப்பதற்கு முன்னர் திட்டமிட்ட விழாக்களையும் ரத்து செய்தனர்.

சூர்யா நடிக்கும் மாஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் நடைபெறவதாக இருந்தது. அதை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த விஷயத்தில் விதிவிலக்கு… நடிகர் வடிவேலு!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அவரது பிரச்சாரம் பிசுபிசுத்து, அ.தி.மு.க. அமோக வெற்றியடைந்த பிறகு திரையுலகமே அவரை வீட்டில் உட்கார வைத்தது.

மூன்று வருட கட்டாய ஓய்வுக்குப் பிறகு தெனாலிராமன் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓடவில்லை.

தற்போது எலி என்ற படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு.

அப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு மற்றும் எலி அப்ளிகேஷன் வெளியீடு இன்று நடைபெறுவதாக இருந்தது.

ஜெ சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு இன்று வருவதையொட்டி சூர்யாவே தன்னுடைய மாஸ் விழாவை ரத்து செய்தார்.

வடிவேலுவோ எலி படவிழாவை ரத்து செய்ய மறுத்துவிட்டாராம்.

மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நிச்சயமாக ஜெயலலிதாவுக்கு பாதகமாகவே இருக்கும்.. அவர் சிறைக்கு செல்வது உறுதி என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்திருக்கிறார் வடிவேலு.

அதன் காரணமாகவோ என்னவோ தன்னுடைய எலி பட விழாவை இன்று நடத்துவது என்பதில் உறுதியாகவும் இருந்து, அனைவருக்கும் அழைப்பு அனுப்ப சொல்லி இருக்கிறார்.

நடந்ததோ வேறு…!

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.

தீர்ப்பைக் கேட்டு கருணாநிதி அதிர்ச்சியடைந்தாரோ இல்லையோ வடிவேலுவுக்கு கடும் அதிர்ச்சி.

தன் எதிர்பார்ப்புக்கு மாறாக ஜெயலலிதா விடுதலையானதால்… அதிர்ச்சியில் மீள முடியாத நிலைக்குத்தள்ளப்பட்ட வடிவேலு வேறு வழியில்லாமல் எலி பட விழாவை ரத்து செய்ய சொல்லிவிட்டார்.

No comments:

Post a Comment