Saturday, May 16, 2015

’36 வயதினிலே- எங்க காலத்துல ஒண்ணு ரெண்டு பிஞ்சில பழுத்தது… இப்போ எல்லாம் இண்டர்நெட்டுலேயே பழுத்துருது..!

30 வயதைத் தாண்டி விட்டாலே நமக்கு வயதாகி விட்டதோ என்கிற எண்ணம் பெண்களின் மனதை ஆக்கிரமித்து விடும். அதிலும் தலையில் ஒரே ஒரு நரையைப் பார்த்து விட்டால் அவ்ளோதான். கணவர், குழந்தை, குடும்பம் என்று ஒரு வட்டத்துக்குள் தங்களை அடக்கிக் கொண்டு அதுவே வாழ்க்கை என்கிற எண்ணத்தோடு இருக்கும் பெண்களுக்கு அது மட்டும் தான் வாழ்க்கையா? அதையும் தாண்டி அவர்களுக்கும் சில கனவுகள் இருக்கும்.

அந்தக்கனவுகள் நிறைவேற ஒரு கணவனாக ஆண்கள் எந்த விதத்தில் மனைவிக்கு உதவுகிறார்கள். 36 வயதை நெருங்கும் எல்லாப் பெண்களுக்கும் இப்படி நிறைய கனவுகள் இருக்கும். அந்தக் கனவுகளை சிதைக்க விடாமல் அவர்களையும் அதை நிறைவேற்றிக்கொள்ள உதவி செய்யுங்கள் அல்லது வழி விடுங்கள் என்று பெண் இனத்துக்கு பெருமை சேர்க்கும் படமாகவும், பெண்கள் என்றாலே இந்தந்த வேலைகளுக்கு மட்டும் தான் லாயக்கு என்கிற அடிமை மனோபாவத்தில் இருக்கும் ஆண்களுக்கு பாடமாகவும் ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ’36 வயதினிலே.’

சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகா ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹவ் வோல்ட் ஆர் யூ’ படத்தின் ரீமேக். மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூவே தமிழ் வெர்ஷனையும் இயக்கியிருக்கிறார்.

சரி கதை என்ன..?

36 வயதாகும் வசந்தி தாலுகா ஆபீசில் கிளார்க்காக வேலை பார்க்கிறார். அவரது கணவர் ரகுமான் மத்திய அரசின் வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராக வேலை செய்கிறார். என்னதான் அரசாங்க வேலையாக இருந்தாலும் ரகுமானுக்கு வெளிநாட்டில் வேலைவாங்கி அங்கு தனது குடும்பத்துடன் செட்டிலாக வேண்டும் என்பது தான் லட்சியம். இவர்களுக்கு 8 வயதில் மகள் இருக்கிறாள். அவளுக்கு வெளிநாட்டில் படிக்க ஆசை. ரகுமானின் முயற்சியால் அயர்லாந்த்தில் நல்ல வேலை கிடைக்கிறது. கூடவே படிப்பதற்காக மகளையும் தன்னுடன் கூட்டிச் செல்கிறார்.

குடும்பத்தோடு அயர்லாந்து செல்ல திட்டமிடும்போது வசந்திக்கு மட்டும் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட ரகுமான், மகளுடன் வெளிநாடு சென்று விடுகிறார். மகளைப் பிரிந்து தனிமையில் இருக்கும் வசந்தி மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அவர் படிக்கிற காலத்தில் எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் முதல் ஆளாக வரும் வசந்தியா இது? என்று ஆச்சரியப்படுகிறார் அவரோடு கல்லூரியில் ஒன்றாகப் படித்த அபிராமி.

”என்னோட இன்ஸ்ப்ரேஷனே நீங்க தான். நான் அப்போ பார்த்த வசந்தியை எங்கே..?” அவங்களை நான் மறுபடியும் பார்க்கணும்” என்று உசுப்பேத்தி விடுகிறார்.

அதன் பிறகு அவருடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக ஆகிறது. எந்தக் கணவன் நீ எதுக்குமே லாயக்கு இல்லை என்று திட்டித் தீர்த்தானோ? அதே கணவன் வசந்தியை காரில் ஏறிப்போக பெருமையோடு கதவை திறந்து விடுகிறான். அந்தளவுக்கு வசந்தி தன் வாழ்க்கையில் என்ன பெரிதாக சாதித்தாள்? என்பதே கிளைமாக்ஸ்.

8 வருடங்களுக்குப் பிறகு வசந்தியாக வரும் ஜோதிகாவை சின்னச் சின்ன முக பாவனைகளில் கூட அதே துறுதுறு குறும்புத்தனங்களுடன் ரசிக்க முடிகிறது. கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறார். 36 வயதில் ஒரு அம்மாவின் மனநிலை எப்படி இருக்கும். ‘மொழி’ படத்தில் பேசாமல் உடல் மொழிகளாலே தன் கேரக்டரை பேச வைத்த ஜோதிகா இப்படத்தில் தைரியமாக மேடையில் எல்லாம் ஏறி ஆர்கானிக் உணவுகளைப் பற்றி விளக்கும் போது அப்படி ஒரு கம்பீரமான பார்வை.

இன்னும் சில வருடங்களுக்கு முன்பாகவே ஜோவுக்கு ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கலாமே சூர்யா?

ஜோதிகாவின் கணவராக மாஜி நடிகர் ரகுமான். மிகச்சிறந்த கதாபாத்திரம் அவருடையது. மனைவி என்பவள் எப்போதுமே தனக்கு கீழ் தான் இருக்க வேண்டும். தான் சொல்வதைக் கேட்பது, குழந்தை, குடும்பத்தை கவனித்துக் கொள்வது, மாமனார், மாமியாரை கவனிப்பது என மனைவிமார்களை ஒரு இயந்திர மனோபாவத்தோடு பார்க்கும் கணவர்மார்களுக்கு அவருடைய கேரக்டர் ஒரு சரியான பாடம்.

ஒரு சிறிய விபத்தால் சிக்கி அது போலீஸ், விசாரணை என்று போனால் தனது அயர்லாந்து வேலைக்கு விசா பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்து அந்த விபத்துக்கான பழியை மனைவியை ஏற்கச் சொல்வதும், பிறகு அதுவே அவருக்கும் பெரும் பிரச்சனையாகும் போது “நீ எதைத்தான் உருப்படியாச் செஞ்சிருக்கே..” ‘‘எதுக்குமே லாயக்கில்லே’’ என்று கிடைக்கிற கேப்புகளில் எல்லாம் மனைவிகளை மட்டம் தட்டும் ஆண் வர்க்கத்தின் நிஜ மனோபாவத்தை மிக அழகாக வெளிக்காட்டியிருக்கிறார்.

டெல்லி கணேஷ், நாசர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷிணி என படத்தில் வருகின்ற மற்ற கேரக்டர்கள் எல்லாமே எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

புரணி பேசுவதும், மற்ற பெண்கள் மத்தியில் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசுவதும் பெண்களுக்கே உரிய கலை. அதை தேவதர்ஷிணி – ஜோதிகா காம்பினேஷன் காட்சிகளில் அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ரோஸன் ஆண்ட்ரூஸ்.

சந்தோஷ் நாராயணின் இசையில் ‘வாடி ராசாத்தி’ பாடல் ஆடியோ ரிலீஸ் அன்றே ரசிகர்களின் பேவரைட்டாகி விட்டது. மீதமிருக்கிற பாடல்களான ஹேப்பி, போகிறேன் ஆகிய ட்யூன்களும் மனதை மயக்கும் மெல்லிசையாக ஒலிக்கிறது.

படத்தின் எக்கச்சக்க கைத்தட்டல்களுக்குரியவர் வசனகர்த்தா விஜி. எங்க காலத்துல ஒண்ணு ரெண்டு பிஞ்சில பழுத்தது… இப்போ எல்லாம் இண்டர்நெட்டுலேயே பழுத்துருது..! விமர்சனம் பண்ணிப் பண்ணியே கடந்த ரெண்டு தலைமுறை வீணாப்போச்சு… மாதிரியான நறுக் வசனங்கள் படத்துக்கு மிகப்பெரிய பலம். அவை தான் படத்தை தாங்கிப் பிடிக்கின்றன.

கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரோஸன் ஆண்ட்ரூஸ்.

பெண்களின் உலகை நன்கு அறிந்தவராய் அதிலும் திருமணத்துக்குப் பிறகு 36 வயதைத் தாண்டி விடும் பெண்களின் ஏக்கங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும். கட்டிய கணவருக்காகவும், குழந்தைகளுக்காகவும் அவர்கள் எப்படியெல்லாம் தங்கள் கனவுகளை மனசுக்குள்ளேயே பூட்டி வைத்து ஒரு சிறைப்பறவை போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை மிக வெளிப்படையாக காட்டியிருக்கிறார்.

என்றாலும் பெண்களின் சுதந்திரமான வாழ்க்கை வெறும் 36 வயதுவரை என்று வயதைச் சுறுக்கி அவர்களின் ஆசைகளுக்கு அணை போட்டிருப்பது மட்டும் தான் மனசுக்கு கொஞ்சம் நெருடல். மற்றபடி 6 லிருந்து 60 வரை எல்லா வயதினரும் கண்டு ரசிக்கக் கூடிய படம் தான் இந்த ’36 வயதினிலே.

No comments:

Post a Comment