Saturday, May 9, 2015

நீங்கள் வாங்கும் தங்கம், சுத்தத் தங்கமா? ஓர் எச்சரிக்கை கைடு

‘‘ஆயிரங்கள், லட்சங்கள் என்று கொடுத்து தங்க நகைகளை வாங்கிக் குவிக்கும் மக்களே, நீங்கள் கொடுக்கும் பணத்துக் கேற்ற எடை மற்றும் தரத்தில் அந்தத் தங்கம் இருக்கிறதா என்று ஒரு நாளாவது யோசித் திருக்கிறீர்களா? நீங்கள் வாங்கும் தங்க நகை களில் பெரும்பாலானவை கலப்பட தங்கத்தில் தயாரானவையே!”

– இப்படிச் சொல்லி நம்மை திடுக்கிட வைக்கிறார், `கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பின் முன்னாள் தலைவர் தேசிகன்.

ஆண்டு முழுக்கவே தங்கம் வாங்கிக் கொண்டிருந்தாலும், அதற்கும் ஒரு சீஸனாக, அட்சய திருதியை என்பது சில பல ஆண்டு களாக இங்கே பிரபலமாக இருக்கிறது. இந்த ஆண்டுக்கான அட்சய திருதியைக்கு (ஏப்ரல் 21) சில தினங்களுக்கு முன் சென்னை பத்திரிகையாளர் சங்க அரங்கில் தங்கம் பற்றி தேசிகன் இப்படி பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சியும், விழிப்பு உணர்வும் தருகின்றன.

கேடிஎம் ஜாக்கிரதை!

‘‘உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 880 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம், மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் ஏமாளிகள் அதிகம் என்பது ஒன்று மட்டுமே! அந்தளவுக்கு நமக்கு தங்கம் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது. கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், தங்கம் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகள் கண்டறியப்பட்டன.

தென்இந்தியாவில்தான் அதிகமானோர் தங்கம் வாங்குகிறார்கள். மக்கள் நகைக்கடை களால் அதிகம் ஏமாற்றப்படுவதும் இங்குதான். ‘ஹால்மார்க்’ முத்திரை என்பது தங்கத்தின் தரத்தை உறுதிபடுத்தும் முத்திரை. இந்த முத்திரையுள்ள தங்கத்தை வாங்கும்போதும்கூட பல கடைகளில ஏமாற்று வேலை நடப்பதுதான் வேதனை! உச்சபட்சக் கொடுமையாக, உட லுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய, கேன்சர் ஏற்படுத்தக்கூடிய வேதிப் பொருட்கள், தங்கத்துடன் கலப்படப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன. இது நிரூபிக்கப்பட்ட உண்மை. உதாரணமாக, கேடிஎம் எனும் வேதிப்பொருளை தங்க நகை செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள். இது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பெரும்பாலும் தங்க ஆபரணங்களில் இது சேர்க்கப்படுகிறது.

பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கம் குறித்த விழிப்பு உணர்வைப் பெறவேண்டியது முக்கியம். அதற்காகத்தான் இந்த ஆய்வை மேற்கொண்டோம். அரசிடம், தங்க வணிகத்தில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவல்ல மூன்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கவிருக்கிறோம். தங்கத்தின் எடையைக் குறைப்பதற்காக சேர்க்கப்படும் வொயிட் மெட்டல் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்; ஹால்மார்க் முத்திரையை சரிவர வழங்குவதோடு அதை சரியாக பின்பற்றாதவர்களுக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்; அரசாங்கமே தங்க உருக்காலைகள் தொடங்கி சுத்தமான தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும்” என்ற தேசிகன்,

“மும்பை போன்ற இடங்களில் தங்க விற்பனையில் பல கட்டுப்பாடுகள் இருப்பதுபோல், தமிழகத்திலும் வந்தால்தான், தங்கம் விஷயத்தில் மக்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க முடியும்!’’ என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

ஹால் மார்க் முத்திரையிலும் மோசடி!

தங்கம் குறித்து தொடர்ந்து பேசிய தேசிகன், “இப்போதெல்லாம் ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்கம் அல்லது வெள்ளி நகைகள் தரமானவை என்று கூறப்படுகிறது.  வாடிக்கையாளர்கள், தரமற்றவற்றை வாங்காமல் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட முத்திரை (BIS) என்பதால், ஹால்மார்க் முத்திரை நம்பகமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த முத்திரையானது நாம் வாங்கும் ஒவ்வொரு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணத்துக்கும்  சரிவர வாங்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது அத்தனை சுலபமான காரியமல்ல. இதைப் பயன்படுத்திக் கொண்டும் மக்களை ஏமாற்றுகின்றனர், நகை வியாபாரிகள் பலரும்.

இந்தியாவில் ஹால்மார்க் முத்திரை வழங்கக்கூடிய சென்டர்கள் 324 இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு சென்டரில் 500 ஆபரணங்களை மட்டுமே பரிசோதிக்க முடியும். ஆக, 324 சென்டர்களிலும் ஒரு நாளில் 1,62,000 ஆபரணங்களை மட்டுமே பரிசோதிக்க முடியும். ஒரு நகையின் எடை சராசரியாக 10 கிராம் என்று வைத்துக்கொண்டால், ஒரு நாளைக்கு 1.62 டன் நகைகள் வரை மட்டுமே ஹால்மார்க் முத்திரை கொடுக்கமுடியும். ஓர் ஆண்டுக்கு 591 டன் அளவு நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும். ஆனால், இந்தியாவின் தங்க நகை இறக்குமதி அளவு ஆண்டுக்கு, 880 டன். இந்நிலையில், ஹால் மார்க் முத்திரை என்பது நூறு சதவிகிதம் எப்படி சாத்தியம் என்று யோசியுங்கள்!

தங்கத்தில் தொடரும் கலப்படம்!

22 காரட் (916) தங்கமாக இருந்தாலும், 8 கிராம் (8,000 மில்லி கிராம்) ஆபரணத்தில், 7,328 மில்லி கிராம்தான் தூய்மையான தங்கம் இருக்கிறது. மீதம் 672 மில்லி கிராம் செப்பு அல்லது வேறு உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இது தங்கத்தை ஆபரணங்களாக மாற்றுவதற்காக செய்யப்படுவது. ஹால்மார்க் முத்திரை பெறாத மற்றும் மக்களை ஏமாற்றுவதற்கென்றே இருக்கும் நகைக்கடைகளில் விற்கப்படும் நகைகளில் இந்தக் கலப்படத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும். இத்தகைய கலப்பட தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களும், `916 தங்கம்’ எனப்படும் தங்கத்துக்கு தரும் பணத்தையே கொடுக்கிறார்கள். ஆண்டுதோறும் இப்படி சுமார் 480 டன் தங்கம் வரை இங்கே ஏமாற்றி விற்கப் படுகிறது.

மோசடிகள் பலவிதம்!

இந்தியாவில் தங்கத்தை, ஆபரணங்களாக மாற்றும்போது நகைக்கடைக்காரர், தரகர், இடைத்தரகர் என ஒவ்வொரு கட்டத்திலும் தங்கம் சுரண்டப்படுகிறது. இதன் மூலமாக மட்டுமே ஒன்பது கோடி ரூபாய் வரை இவர்கள் வருமானம் பார்க்கிறார்கள். தங்க நகை சேதாரம் மூலமாகவும் பெரும் கொள்ளை நடக்கிறது. இறக்குமதியாகும் 880 டன் தங்கம், ஆபரணங்களாக மாற்றப்படும்போது மொத்தம் 2.6 டன் வரை சேதாரம் இருக்கலாம். ஆனால், மக்களிடம் விற்கும்போது, ஒவ்வொரு நகைக்கும் அதிகமான தங்கம் சேதாரமாகக் கணக்கிடப்படுகிறது. இதுதவிர, நகைகள் வாங்கும்போது 6.78 கிராம் எடை இருந்தால், ரவுண்டாக 7 கிராம் என்று சொல்வார்கள். நகை எடை பார்க்கும் மெஷினில் ஸ்பெஷல் கீ எனப்படும் சாம்பிள் பட்டனை அழுத்தியவுடன் எடையை ரவுண்டாக மாற்றிவிடும். இப்படி பெரும்பாலான கடைகளில் மில்லி கிராம் தங்க அளவில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட, சிறுதுளி பெருவெள்ளமாக கடையின் முதலாளி களுக்கு தங்க மழை பொழிகிறது!

தங்கத்தில் என்னவெல்லாம் கலக்கப்படுகிறது?

ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளில் 31 பர்சன்ட் அளவுக்கு அலாய் எனப்படும் வொயிட் மெட்டல் கலக்கப்பட்டிருக்கும். நீங்கள் 8 கிராம் நகை வாங்குகிறீர்கள் என்றால், அதில் கிட்டத்தட்ட 2.5 கிராம் அளவுக்கு இந்த வொயிட் மெட்டல் கலந்திருக்கும். மீதி 5.5 கிராம் மட்டுமே தங்கம். உதாரணத் துக்கு, நீங்கள் 8 கிராம் நகையை 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள். ஆனால், இதிலிருக்கும் 5.5 கிராம் தங்கத்தின் உண்மை யான மதிப்பு 13,750 ரூபாய். மீதி 6,250 ரூபாய் உங்களிடம் சுரண்டப்பட்டு, அதற்குப் பதிலாக, 2.5 கிராமுக்கு 250 ரூபாய் மதிப்புள்ள வொயிட் மெட்டல் கலக்கப்படுகிறது. கடைக்காரர்கள் பெறும் லாபத்தையும், உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்” என்று சொன்னார் தேசிகன்.

தங்கங்களே… உஷார்!

No comments:

Post a Comment