Thursday, May 7, 2015

உணர்ச்சிகளை தாங்கிய உத்தம வில்லன்- ஸ்பெஷல்

உலக நாயகனின் உத்தம வில்லன் எப்படி? இது தான் இன்று இணையத்தளங்களில் ஹாட் டாபிக். படம் வெளிவந்து ஒரு வாரம் ஆகவிருக்கின்றது, ஆனாலும் இந்த படத்தை பற்றி நிறையோ? குறையோ? கூறிக்கொண்டே தான் இருக்கிறார்கள், இதிலிருந்தே தெரிகிறது படம் அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்துள்ளது என்று. சிலர் ஒரு விதமான வெட்டி ஈகோவிற்காகவே தான் படத்தை குறை கூறி வருகின்றனர். இன்னும் சொல்லவேண்டும் என்றால் சிறு குழந்தைகள் போல ‘நான் அழுகலையே எனக்கு அழுகையே வரலேயே’ என்று கூறுவது போல் தான் இவர்கள் கதை.

கமலின் படம் சாதரணமாகவே யாருக்கும் புலப்படாத ஒன்று தான், விஸ்வரூபம் என்ற ஆக்‌ஷன் படத்திற்கு பிறகு கமல், உத்தம வில்லனில் மனிதனின் மனதிற்குள் நடக்கும் ஆக்‌ஷன் காட்சிகளை தொகுத்து வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் ஒன் லைன் சாகா வாரம் என்பது பெரும் சாபமே என்பது தான்.

உலகமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக திகழும் மனோரஞ்சன் மரணத்தில் விளிம்பில் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார். இதனால் தன் ரசிகர்கள் சிரிக்கும்படி ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று உத்தம வில்லன் என்ற படத்தை இயக்குகிறார். படத்திற்குள் ஒரு படம் மெட்டா என்று அழைக்கப்படும் திரைக்கதையை சார்ந்தது.

இந்த கதையில் மரணம் பலமுறை தேடிவந்தும் மரணமில்லாமல் வாழும் மிர்துன்ஜெயனாக கமல் வருகிறார். நிஜத்தில் மரணம் தேடி வர, இதை நிழல் உலகில் விரட்டி ஒரு கலைஞனாக கமல் பெருமிதம் அடைகிறார். இதை ஒரு அழகிய கவிதையாக செதுக்கியுள்ளார். படத்தில் வரும் நாடக காட்சிகள் சிலரின் பொறுமை யை சோதித்தது என்பது உண்மை தான். ஆனால், இவை அனைத்தயும் மனோரஞ்சன் நடிப்பால்+கண்ணீரால் கரைத்து விடுகிறார்.

தன் முதல் காதலிக்கு பிறக்கும் குழந்தை, இது தெரியாமல் ஒரு திருமணம், திருமணத்திற்கு பின்பும் பெண் மருத்துவரிடம் காதல் என கமல் மூன்று காதலை இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், இந்த மூன்று காதலிலும் அவர் தன்னால் முடிந்த அளவிற்கு உண்மையாகவே இருப்பதாக சித்தரித்துள்ளனர். தன் மகள் இருப்பதை ஜெயராம் மூலமாக அறிந்து கொள்ளும் கமல், அவர் சொல்ல சொல்ல தன் முகபாவனைகளால் கல் நெஞ்சையும் கரைத்து விடுவார். பிறவி கலைஞனுக்கே இது சாத்தியம்.

அதேபோல் தன் வாழ்வு எங்கு யாரால் தொடங்கியதோ, அவரால் தான் நம் வாழ்வின் அர்த்தம் முடிய வேண்டும் என கே.பியிடம் படத்தை இயக்கும் வாய்ப்பை கேட்டு நிற்கின்றார். அப்போது உண்மையை அறிந்த கே.பி உனக்கா இந்த சோதனை, இந்த கொடிய நோய் எனக்கு வந்திருக்க கூடாதா? என்று அழும் காட்சியில் கே.பி அவர்களின் மரணத்திற்கு கமல் வராததன் அர்த்தம் அனைவருக்கும் புரியும். இருவருக்குமிடையே அப்படி ஒரு புரிதல்.

தன் காதலி தனக்கு எழுதிய கடிதத்தையும் தன் மேனேஜர் எம்.எஸ்.பாஸ்கரிடம் கொடுத்து படிக்க சொல்லி, அந்த வார்த்தைகளையும் கவணிக்க மறக்கிறது கமலின் முகபாவனைகள். அதேபோல் பார்வதி மேனனிடம் கிளைமேக்ஸில் தன் மேக்கப்பை கலைத்து கொண்டே பேசும் இடத்தில் மேக்கப்புடன் கமலின் கண்ணீரும் கலந்து செல்வதை காணாலாம்.

மகுடத்திற்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல் இதுவரை கண்டுக்கொள்ளாத தன் மகனிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு தன் நோயை பற்றி கூறும் இடத்தில் ஒரு கவிதை கூட தோற்று விடும். மெல்ல மெல்ல மனம் மாறி தன் தந்தையை கட்டி தழுவி அழும் இடத்தில், ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தலைவா அவார்ட் உறுதி என கூற, சிரித்தும் அழுதும் சரிப்பா..என்று கமல் கூறும் இடத்தில் கண் கலங்காதவர்கள் உணர்ச்சியற்ற பிண்டமாக தான் இருக்க வேண்டும்.

இதே காட்சியில் உனக்கு என்ன ஆகனும் என்று ஆசை என கமல் கேட்க, ஒரு Screenplay எழுதனும், எங்க அப்பா யார் என்று இந்த கோடம்பாக்கத்திற்கு காட்டனும் என்று மகன் கூறுகிறார், இதற்கு கமல் மெல்லிய புன்னகையுடன் ஓகே ஆனால், நீ எழுதி முடிக்கும் போது என்னை விட நல்ல நடிகர்கள் வந்து விடுவார்கள் என கமல் கூற, அவுங்க எல்லாம் என் அப்பா இல்லையே? என்று கூறி நெகிழ வைக்கிறார்.

கமலின் மாஸ்டர் பீஸ் இந்த உத்தம வில்லன் என்று கூறலாமா? என்றால் தெரியாது, ஆனால், மனோரஞ்சனின் மாஸ்டர் பீஸ் இந்த உத்தம வில்லன் என்று தைரியமாக கூறலாம். படத்தில் குறைகள் இருக்க தான் செய்கிறது, நாடக காட்சிகள் மிகவும் மெதுவாக நகர்கிறது என ஆயிரம் கருத்துக்கள் கூறினாலும், கமல் என்ற ஒரு கலைஞனால் அனைத்தும் உடைந்து தான் போகின்றது.

படம் முழுவதும் கமல் கஷ்டத்தை மனதிலும், கண்ணீரை கண்களிலும் தேக்கி வைத்து, படம் முடியும் தருவாயில் மரணப்படுக்கையில் தன் கண்களை சிமிட்டி, முத்தம் கொடுக்கையில் படம் பிடிக்க வில்லை என்று கூறுபவர்கள், கமல் படத்தில் குறைசொன்னால் நாம் புத்திசாலி என்று நினைத்து கொண்டு இருப்பவர்கள் கூட கண்கலங்கி தான் செல்கின்றனர். கே.பி ஒரு காட்சியில் சொல்வார் ‘இவனை போல் வேறு எவனாலும் நடிக்க முடியாது..என் சிஷ்யன்’ என்று இவை அனைத்தும் கே.பியின் மனதிலிருந்து வந்த வார்த்தைகள், இது எல்லாம் வெறும் பேப்பர், பேனாவில் இருந்து பிறந்த வார்த்தைகள் அல்ல...படம் பார்த்த பின் அனைவருக்கும் தோன்றும் ஒரு விஷயம் ‘கமல்ஹாசன் எங்க தமிழ் நாடுடா’ என்று ஒரு கர்வம் தோன்றும்

No comments:

Post a Comment