Tuesday, May 12, 2015

எல்லாவற்றுக்கும் காரணம் ஜாதக கட்டம் ... அதை உணர்த்துவதே ‘காலகட்டம்’.. ஜெ. ரிலீஸ்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக  டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

"சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதும் அரசியல் ஆதாயத்துக்காகவோ, பதவி ஆசைக்காகவோ ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்ததில்லை. இதற்கு முந்தைய காலக்கட்டங்களில்கூட அதிமுகவுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டதின் பேரில் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன். அவ்வளவுதான்.

தற்போது, ஜெயலலிதா விடுதலை குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி,வியப்பு தெரிவித்துள்ளன. இந்த தீர்ப்பில் வியப்படைய என்ன இருக்கிறது. வழக்கு நீதிமன்றங்களில் இருந்து மாறும் போது நீதிபதிகள் பார்வையும் மாறுகிறது. அந்த வகையிலேயே ஜெயலலிதா விடுதலையாகி இருக்கிறார்" என்றார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், மக்களின் முதல்வர் என்று அழைக்கப்பட்ட “அம்மா” வழக்கில் இருந்து விடுதலை ஆகிவிட்டார். என்ற தீர்ப்பு அறிவு பூர்வமாக சிந்திக்க கூடியவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். அவர்கள் வாதம் செய்வதற்கு இருக்கிறது உச்ச நீதிமன்றம்... ஆனால் இந்த தீர்ப்பை உணர்வு பூர்வமாக அணுக கூடிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. காரணம் அதற்கு பெயர் தான் மக்கள் மன்றம்.

அவர்களது பார்வையில் இந்த தீர்ப்பு மகத்தில் உதித்த மகராசிக்கு கிடைத்த மகத்தான வெற்றி... சிம்மத்தில் ஜெனித்த சிறைச்சாலைக்கு அஞ்சாத சிந்தனை செல்விக்கு கிடைத்த சீரிய பரிசு... அவரது பொறுமைக்கு போடப்பட்ட பூமாலை. நிதானத்திற்கு கிடைத்த நிஜ வெற்றி மாலை. அம்மாவின் தளராத தன்னம்பிக்கை , திடமான தெய்வ நம்பிக்கை இவற்றுக்கும் காலம் அவர் கையில் கொடுத்து இருக்கும் வெற்றிக் கனி...

ஆண்டவனிடத்தில் அத்தனை பேர் செய்து கொண்ட வேண்டுதலை

அதனால் தான் அவன் அருளால் ஆகியிருக்கிறார் விடுதலை.

“என்ன நடந்தது” “எங்கே நடந்தது” என்றெல்லாம் பாராசக்தி பாணியில் கலைஞர் வசனம் பேசியிருக்கிறார்.. மனிதனை எல்லாம் மீறி ஒரு தெய்வ சக்தி இருக்கிறது என்பதே உண்மை. கர்நாடகத்தில் தனி நீதிமன்றம் அன்று அம்மாவுக்கு தண்டனை வழங்கியது அது ஒரு காலகட்டம். இன்று கர்நாடக உயர்நீதிமன்றம் அம்மாவுக்கு விடுதலை அளித்து இருக்கிறது இது ஒரு காலகட்டம்.

கோல் ஒச்சுவது என்னவோ சட்டம்

குறுக்கு வழியில் மனிதர்கள் போடலாம் ஆயிரம் திட்டம்,

கொடுப்பனை இருந்தால் மட்டும்தான் பதவி-பட்டம்

இவை எல்லாவற்றுக்கும் காரணம் ஜாதக கட்டம்

அதை உணர்த்துவதே ‘காலகட்டம்’

இப்படி அவர் பாணியிலேயே ஜெயலலிதா விடுதலைக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் டி.ராஜேந்தர்

No comments:

Post a Comment