Sunday, May 3, 2015

நின்றால் அழகு… நடந்தால் அழகு…! : விருது விழாவில் நடிகையை வர்ணித்த நீதிபதி!

விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஸ்ரீ நாகிரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் சென்ற ஆண்டின் மிகச்சிறந்த பொழுது போக்கு திரைப்படத்துக்கான விருது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’படத்துக்கு வழங்கப் பட்டது.
ஸ்டுடியோ க்ரீன் சார்பில் அதன் இணை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விருதை பெற்றுக்கொண்டார். விருது வழங்கி ஜார்கண்ட் உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பக விநாயகம் பேசினார்,அவர்பேசும் போது..

“இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். ஒரு மனிதன் உயர்வதற்கு பின்பற்ற ஐந்து விஷயங்கள் தேவை .

1.இறைநம்பிக்கை. 2.உழைப்பு 3.ஒழுக்கம் 4.நாணயம் 5.மனிதநேயம் இப்படி பின்பற்றி உயர்ந்தவர்களில் எனக்கு மூன்று பேரை பிடிக்கும். பி.நாகிரெட்டி, ஆரூர்தாஸ், எஸ்.பி.முத்துராமன், . இவர்களின் ஆற்றல் சாதனைகளை விட தனிமனித ஒழுக்கம் மிகச்சிறந்தது என்று மதிக்கப்படுகிறவர்கள். நாகிரெட்டி சாதனைகளாலும் பேசப்படுகிறவர்.

இங்கே சரோஜாதேவி வந்திருக்கிறார். அவர் நின்றாலும் அழகு; நடந்தாலும் அழகு; ஆடினாலும்அழகு; ஓடினாலும்அழகு; பேசினாலும் அழகு; ஏன் அழுதாலும் அழகுதான். எம்.ஜி.ஆர். சிவாஜி என்கிற இரு இமயமலைகளை ஈர்த்தவர் சரோஜாதேவி. எனக்கு இன்றும் பழைய நினைவுகள் நிழலாடுகின்றன. எனக்கு சினிமா மீது மிகவும் ஆர்வம் பள்ளி. கல்லூரி பருவத்தில் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். சுமார் 500 நாடகங்களில் நடித்திருப்பேன். பாரதியாக அர்ஜுனனாக எல்லாம் நாடகங்களில் நடித்திருக்கிறேன்.

எனக்கு சினிமாவில் தெரிந்தவர் எம்.ஜி.ஆர்தான். நான் அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். நான் எம்.ஜி.ஆருக்காக சிறை சென்று இருக்கிறேன். நான் சாதாரண வக்கீலாக இருந்தவன் என்னை அரசு வக்கீலாக்கி அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்தான். ஆம் அவர்தான் என்னை அரசு வழக்கறிஞராக்கினார். அப்போது எனக்கென்ன தெரியும் என்றேன்.உனக்குத்தெரியும் என்றார்.நான் நீதிபதியானபோது அவர் உயிருடன் இல்லை. ஆனால் அவரது ஆசீர்வாதம் இருந்தது. இந்த நிகழ்ச்சியிலும் ரெட்டியாரின் ஆசீர்வாதம் நிறைந்து இருக்கிறது. உழைப்பவரே உயர்ந்தவர் என்பார் எம்.ஜி.ஆர். உழைப்பவரை உயர்த்தியவர் நாகிரெட்டி அவர்கள்.

ஒரு முறை ஏவிஎம் திருமணவிழாவில் ஒரு பந்தியில் சாப்பிட்ட இலைகளை எடுக்க ஆள் வரவில்லை. ரெட்டியாரே சாப்பிட்ட இலைகளை எடுத்தார். பின்னர் சாப்பிட வந்தவர்கள் எடுக்க ஆரம்பித்தனர் அவ்வளவு எளிமையானவர் நாகிரெட்டியார். நாகிரெட்டியார் மாமரம் போன்றவர். அவர் பேசுவார், செய்வார், உதவுவார்.

அவர் பெயரில் விருது பெறும் மெட்ராஸ்’ தயாரிப்பாளர், படக்குழுவினரை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன் இவ்வாறு நீதிபதி பேசினார்.

No comments:

Post a Comment