Friday, May 1, 2015

‘உத்தம வில்லன்’ விவகாரத்தில் கமல்ஹாசன் செய்தது நியாயமா?

இன்று வெளியாவதாக இருந்த உத்தமவில்லன் படம் இன்னும் வெளியாகவில்லை…!

காலை முதல் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

சென்னையில் உள்ள அபிராமி தியேட்டர் உட்பட பல தியேட்டர்களில் பொறுமை இழந்த ரசிகர்கள், தியேட்டரின் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்.

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான கலைப்புலி தாணு மற்றும் நிர்வாகிகள் உத்தமவில்லன் படத்தை ரிலீஸ் செய்தவற்கான பேச்சுவார்த்தையில் பல மணி நேரமாக ஈடுபட்டுள்ளனர்.

உத்தம வில்லன் படத்துக்கு சம்மந்தமே இல்லாத பலர் இங்கே பஞ்சாயத்து செய்து கொண்டிருக்க, படத்தின் நாயகனும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான கமல்ஹாசன், நடிகை பூஜாகுமாருடன் துபாயில் நடைபெற்ற உத்தமவில்லன் ப்ரீமியர்ஷோவுக்காக சென்றிருக்கிறார்.

55 கோடி பட்ஜெட்டில் உத்தமவில்லன் படத்தைத் தயாரித்த லிங்குசாமிக்கு, சாட்டிலைட் ரைட்ஸ் மற்றும் இண்டியன் தியேட்டரிகல் ரைட்ஸை மட்டும் கொடுத்திருக்கிறார் கமல்.

அதாவது 55 கோடி பணம் போட்டு உத்தமவில்லன் படத்தைத் தயாரித்த லிங்குசாமி இந்த இரண்டு உரிமைகளையும் விற்று தன் முதலீட்டையும், லாபத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

55 கோடியில், தனக்கு 25 கோடி சம்பளம்….மீதி 30 கோடி படத்தின் தயாரிப்புச் செலவு என்று லிங்குசாமியிடம் கணக்குச் சொன்ன கமல், எப்.எம்.எஸ் என்கிற வெளிநாட்டு உரிமையை தானே எடுத்துக் கொள்வதாகச் சொல்லி அதற்கு 8 கோடி மதிப்பு போட்டு தன் சம்பளத்தில் கழித்துக்கொள்ளும்படி சொல்லி இருக்கிறார்.

8 கோடிக்கு வாங்கிய எப்.எம்.எஸ். உரிமையை 10 கோடிக்கு விற்று 2 கோடி லாபம் பார்த்துவிட்ட கமல், எப்.எம்.எஸ். புரமோஷனுக்காகவே துபாயில் நடைபெறும் ப்ரீமியர் ஷோவுக்கு சென்றிருக்கிறார்.

சுமார் 25 கோடி பிரச்சனையில் உத்தமவில்லன் படம் இன்னும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகவில்லை.

ஆனால் கமல்ஹாசன் கை நீட்டி பணம் வாங்கிய வெளிநாடுகளில் மட்டும் எந்த சிக்கலும் இல்லாமல் படம் ரிலீஸ் ஆகிவிட்டது.

அதனால்தானோ என்னவோ, 55 கோடி பணம் போட்ட தயாரிப்பாளர் லிங்குசாமியின் பிரச்சனையைப் பற்றி மட்டுமல்ல உத்தமவில்லன் படம் ரிலீஸ் ஆகாதது பற்றியும் கவலைப்படாமல் ஹாயாக துபாயில் இருக்கிறார் கமல்.

No comments:

Post a Comment