Sunday, May 10, 2015

மூட்டுவலியை விரட்டும் முடக்கத்தான்…மூலிகை வைத்தியம்.

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள் இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்ற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன.

இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்த்துக் கொள்ளும் வித்தையை ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கை கடத்தியே வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்.

இன்றைக்கு  நீரழிவுக்கு நிகராக மனித இனத்தை வாட்டிக் கொண்டிருக்கும் மற்றொரு நோய், ‘ருமாட்டாயிட் ஆர்த்ரைடீஸ்’  (rheumatoid arthritis)  எனப்படும் மூட்டு நோய். இதற்கு, அறுவை சிகிச்சை வரை ஆலோசனை வழங்குகிறது நவீன மருத்துவம்.

ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மூலிகை மூலமான தீர்வை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர் முன்னோர்கள்.  ‘முடக்கத்தான்’  என அழைக்கப்படும் அதி அற்புதமான மூலிகை தான் அது.  ‘முடக்கு வலியை அற்றான்’ என்கிற அர்த்தத்தில் இந்த பெயர் ஏற்பட்டுள்ளது.

மனிதர்களின் வேதனைகளைப் போக்க, வேலியெங்கும் இந்தக் கொடியைப் படரவிட்டுள்ளது இயற்கை. தற்போதும் நகரம், கிராமம் வித்தியாசமில்லாமல் கிடைத்த இடங்களிலெல்லாம் விளைந்து கிடக்கிறது முடக்கத்தான். சிறிய கொடியாக இருந்தாலும் இதன் தண்டுகள் கம்பிகளைப் போல வலிமையானவை.

நீண்ட  இலைக்  காம்புகளைக் கொண்டிருக்கும் இது, ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். வெள்ளைப் பூக்கள், முப்பட்டை வடிவ பலூன் போன்ற காய்களை உடையது. காயினுள் மூன்று அறைகளும், அவற்றில் தலா ஒரு விதையும் இருக்கும். விதை முற்றியதும் பலூன் வெடித்து, விதைகள் பரவுவது மூலமாக  இனப்பெருக்கம்  நடக்கிறது. இதன் தண்டு, இலை அனைத்தும் மருந்துகளாகப் பயன்படுகின்றன.

இத்தனை சிறிய செடி, மூட்டுவலியைத் தீர்க்கும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது… அறிவியல் ஆதாரம் இருக்கிறதா? எனக் கேட்பவர்களுக்கு, தனது ஆராய்ச்சிகள் மூலமாக பதில் சொல்லியுள்ளது ஆஸ்திரேலி யாவில்  உள்ள  குயின்ஸ் பல்கலைக்கழகம்.

‘இந்தக் காலத்தில் சிறுநீர் வரும்பொழுது அதற்கு தோதான இடம் கிடைக்காமல், பெரும்பாலும் அடக்கிக் கொள்கிறோம். அந்த நேரங்களில் உடலில் உள்ள ரத்தம் பலபாகங்களுக்கும் அப்படியே செல்கிறது. இதனால் ரத்தத்தில் உள்ள ‘யூரிக் ஆசிட்’ சிறுசிறு கல்துகள்களாக மூட்டுகளில்… குறிப்பாக, மூட்டுகளை அசைக்க உதவும் தசையான ‘சினோரியஸ் மெம்கிரேம’ என்ற இடத்தில் படிந்து விடுகிறது.

இந்த நிகழ்வு ஆண்டுக் கணக்கில் தொடரும்போது, 35 வயதுக்கு மேல் மூட்டுவலி எட்டிப் பார்க்கிறது. இந்தியாவில் 65 சதவிகிதம் பேருக்கு இந்த நோய் இருக்கிறது. இதில் 85 சதவிகிதம் பேர் பெண்கள். இந்த ‘யூரிக் ஆசிட்’டைக் கரைக்கும் ஆற்றல் முடக்கத்தான் கீரையிலுள்ள ‘தாலைட்ஸ்’ என்ற பொருளில் இருக்கிறது.

இது மூட்டுகளில் படிந்திருக்கும் யூரிக் ஆசிட்டைக் கரைத்து,  சிறுநீரகங்களுக்குக் கொண்டு செல்கிறது. அங்கு சிறுநீராக வெளியேறும்போது, சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நமது உடலில் விட்டுச் செல்வதால்… உடல் சோர்வு நீங்குவதுடன், மூட்டுகளில் வலி குறைந்து, வலிமை பெறுகிறது. மூட்டுகளில் படிந்து கிடக்கும் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கொழுப்புத்திரட்சியையும் நீக்குகிறது’ என்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.

”முதுகு  தண்டு வடத் தேய்மானம், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் உள்ளிட்ட அனைத்து விதமான மூட்டுப் பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்க முடக்கத்தான் உதவுகிறது. முடக்கத்தான் கீரை துவர்ப்புச் சுவையுடையது. அப்படியே கீரையை மாவில் போட்டு அரைத்து அடையோ, தோசையோ செய்து சாப்பிட்டால் கொஞ்சம் மருந்து வாசனை அடிக்கும்.

அதைப் போக்க, கீரையை மிக்ஸியில் அடித்து, மாவில் கலந்து தோசையோ… அடையோ செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். கீரையை ஆய்ந்து, எண்ணெயில் வதக்கி, உப்பும், காய்ந்த மிளகாயும் சேர்த்து அரைத்து துவையலாகப் பயன்படுத்தலாம்.

பொடியாக நறுக்கி, மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம். கீரையைப் பொடியாக நறுக்கி வேகவைத்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்துடன் சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி பொரியல் செய்து சாப்பிடலாம். பருப்புகளுடன் சேர்த்துக் கூட்டு செய்யலாம். இப்படி பலவிதமாக சமைத்துப் பயன்படுத்தலாம்.

இந்தக் கீரையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டால்… கைகால் வலி, மூட்டுவலி, முதுகுவலி, உடல்வலி  அனைத்தும் பறந்து போகும். கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால்… கண் தொடர்பான நோய்கள் குணமடையும்.

கட்டிகளின் மீது அரைத்துப் பூசினால், அவை உடைந்து புண் ஆறும். மூலம், மலச்சிக்கல், கரப்பான், பாதவாதம்,  நரம்பு தொடர்பான நோய்கள் நீங்குவதுடன், தசைநார்களும் வலுப்பெறும். இதை முதன்முதலாக உண்ணும்போது, சிலருக்கு முதல் இரண்டு நாட்களுக்கு பேதியாகும். அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை” என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

முடக்கத்தானை போற்றுவோம்… மூட்டு வலியை விரட்டுவோம்!

No comments:

Post a Comment