Friday, May 8, 2015

''இந்தியா பாகிஸ்தான் - ரசிகர்களுக்கு எல்லை கடந்த எல்லையில்லா ஆனந்தம்!''

நான்,சலீம் வெற்றிப்படங்களை தொடர்ந்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தயாரித்து கதாநாயகராகுவம் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்தியா பாகிஸ்தான்....

கதைப்படி., கார்த்திக் எனும் நாயகர் விஜய் ஆண்டனியும், மெலினா எனும் அறிமுகநாயகி சுஷ்மாவும், கேஸூக்காக அலைந்து திரியும் பிரபலமாகாத இளம் வக்கீல்கள். புரோக்கர்களின் சதியால் எதிர்பாராமல் இருவருக்கும் ஒரே இடத்தில் ஒரே பிளாட்டில் ஒரே வீட்டிற்குள் அலுவலகம் அமைகிறது.

பாதி பாதி அட்வான்ஸ் கொடுத்து ஒரே வீட்டிற்குள் அடுத்தடுத்த அறைகளில் அலுவலகம் நடத்தும் இருவரும் யாருக்கு முதலில் கேஸ் கிடைக்கிறதோ? அவர்களுக்கே இந்த அலுவலகம் சொந்தம். முதலில் கேஸ் கிடைக்காதவர் இடத்தை காலி செய்ய வேண்டும் எனும் ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்டுடன் எலியும் பூனையுமாக ஒரே இடத்தில் உருமிக்கொண்டு வாதாட வழக்கு தேடுகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி பக்கத்தில் இருந்து பரம்பரை நிலப்பிரச்னை ஒன்றிற்காக கார்த்திக் விஜய் ஆன்டனியையும், மெலினா - சுஷ்மாவையும் அணுகுகின்றனர். வாதிக்கு ஒருவரும், பிரதிவாதிக்கு இன்னொருவரும் வழக்குரைஞராக அந்த கேஸில் குதித்து சம்பந்தப்பட்ட நிலத்தை பார்க்க திருநெல்வேலி பக்கத்து கிராமத்திற்கு கிளம்புகின்றனர். ஏற்கனவே ஒரே இடத்தில் இருவரும் அலுவலகம் அமைப்பதற்கு முன்பாக ஷாப்பிங் மாலில் பார்த்த மாத்திரத்தில் காதல் கொண்ட இருவரும், அந்த காதலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பெரியவர்களால் இவருக்கு அவரும், அவருக்கு இவரும் பெண் - மாப்பிள்ளை பார்க்கும் வைபவத்தின் போதும்கூட ஈகோவால் தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்திக் கொள்ளாத இருவரும் அந்த கிராமத்தின் திருவிழா ரம்ய சூழலில் காதல் வயப்படுகின்றனர். அப்பொழுதும் கூட ஒரு சின்ன சந்தேக புரியாமையால் இருவரும் மீண்டும் எதிர் எதிர் துருவமாகின்றனர். இதுபோக ஒரு போலீஸ் அதிகாரியின் போலி என்கவுண்டர் வீடியோ ஆதாரம் இவர்களிடம் இவர்களுக்கே தெரியாமல் சிக்கி இருக்கிறது. அதை தேடிவரும் அந்த போலீஸ் அதிகாரியும் அவரது கூட்டாளிகளும் இவர்களை போட்டுத்தள்ள துரத்துகிறது. மற்றொரு பக்கம் இவர்களை நம்பி கிராமத்து நிலப்பிரச்னை எதிரிகளின் வாரிசுகள் காதல்வயப்பட்டு இவர்களிடம் அடைக்கலம் தேடி வந்து சேர நாயகனும், நாயகியும் தடைபல கடந்து தங்கள் காதலிலும் சேர்ந்து அடைக்கலம் தேடி வந்த இளம்ஜோடியின் காதலையும் சேர்த்து வைத்தார்களா? இல்லையா? எனும் கதையை முழுக்க, முழுக்க காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்து அலுப்பு தட்டாமல் உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் என்.ஆனந்த்! அதற்காக அவரை பாராட்டியே தீர வேண்டும்.

வக்கீல் கார்த்திக்காக, விஜய் ஆண்டனி தனக்கு பெரிதாக வராத நடிப்பை வரவழைக்க முயன்று, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். கோர்ட்டில் வாதாடுவதை விட, அதிகம் நாயகி சுஷ்மாவிடம் விஜய் ஆண்டனி செமயாய் வழக்காடி இருக்கிறார். கூடவே டூயட் காட்சிகளிலும் முந்தைய படங்களைக்காட்டிலும் பெட்டர் மூவ்மென்ட் காட்டியிருக்கிறார்.

மெலினாவாக பெண் வக்கீலாக வரும் நாயகி சுஷ்மா 'நச்' என்று இருக்கிறார், நன்றாகவே நடித்திருக்கிறார்.

காட்டமுத்து பசுபதி, ஹரிதாஸ் - ஜெகன், மருது - எம்.எஸ்.பாஸ்கர், சரத்லோகி, டி.பி.கஜேந்திரன், பக்கோடா பாண்டி, காளி, யோகி பாபு, முனீஷ்ராஜா, சங்கர நாராயணன், ஊர்வசி உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். இவர்களோடு விஜய் நடித்த காதலுக்கு மரியாதை டிவிடிக்கும் செம கேரக்டர்!

ஜெ.கலைக்குமார், அண்ணாமலையின் அர்த்த புஷ்டி பாடல் வரிகளும், அதற்கு தீனா தேவராஜின் இசையும், பின்னணி இசையும் பிரமாதம்! அதிலும், ஒரு ''பெண்ணை பார்த்தேன்...'', ''வாடி பொண்டாட்டி...'' உள்ளிட்ட பாடல்கள் சுகராகம்! என்.ஓமின் ஔிப்பதிவில் பாடல் காட்சிகளின் ஃபாரீன், பாலைவன லொகேஷன்களும், படகாட்சி லொகேஷன்களும் கூட 'ஷாட் பை ஷாட்' பிரமாண்டம் பேசுகிறது!

''உனக்கு அழகுன்னு பேரு யாரு வச்சா...? அப்பா வைக்கல தப்பாவச்சிருக்காங்க...'', ''காதலுக்கு மரியாதை இல்லைன்னா... ஒரு காதல் கோட்டை...'' உள்ளிட்ட வசனங்களும், ''மாவிளக்கு ஏற்றினால் மனசுக்கு பிடிச்சவன் எதிர்படுவான்'' காட்சியும் இந்தியா பாகிஸ்தான் படத்திற்கு ஒரு சோற்று பதம்!

மொத்தத்தில், புதியவர் என்.ஆனந்தின் இயக்கத்தில், ''இந்தியா பாகிஸ்தான் - ரசிகர்களுக்கு எல்லை கடந்த எல்லையில்லா ஆனந்தம்!''

No comments:

Post a Comment