Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, May 18, 2015

கமலுக்குத் தெரிந்தது ரஜினிக்குத் தெரியவில்லையா?

கமல் தன்னுடைய அடுத்தபடமான தூங்காவனம் பற்றி காணொளி மூலம் மக்களுக்குச் சொல்லிவிட்டார். அவருடைய உதவியாளர் ராஜேஷ்தான் அந்தப்படத்தை இயக்கப்போகிறார் என்றும் அறிவித்துவிட்டார். அடுத்தபட அறிவிப்பை அவர் இப்படி வெளியிடக் காரணம் என்ன?

கமல் வெளியிடுவதற்கு முன்பே கமலின் அடுத்தபடம் ஓர்இரவு என்றும் அந்தப்படத்தில் கமல் காவல்துறைஅதிகாரியாக நடிக்கிறார் என்றும் செய்திகள் வலம்வரத்தொடங்கிவிட்டன. இது இப்படியே போனால் பெரியசிக்கலாகிவிடும் என்று எண்ணித்தான் அவரே நேரடியாகப் பேசி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்கிறார்கள்.

ஏற்கெனவே 2003 இல் விருமாண்டி படம் தொடங்குகிற நேரத்திலும் இதுபோன்று நடந்தது. அப்போது ரஜினியின் பாபா படம் பற்றி ஊடகங்கள் ஏகத்துக்கும் எழுதிவிட அதனாலேயே அந்தப்படம் தோல்வியடைய நேர்ந்ததென்று சொல்லப்படும். அந்தச்சமயத்தில் கமல் விருமாண்டி படத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில் அந்தப்படத்துக்கு சண்டியர் என்று பெயர் வைத்து அதனால் பல எதிர்ப்புகள் வந்தன. அதன்பின் விருமாண்டி என்று மாற்றினார்.

அப்போதும் அந்தப்படம் பற்றி ஏகத்துக்கும் எழுதத் தொடங்கினார்கள். அப்போது பத்திரிகையாளர்களைத் தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்துச் சந்தித்தார் கமல். தயவுசெய்து விருமாண்டி படம் பற்றி நீங்களாக எதுவும் எழுதாதீர்கள். நாங்களே படம் பற்றி அவ்வப்போது செய்திகளைக் கொடுத்துவிடுகிறோம் என்று சொன்னார். அதுபோலவே நடந்தது.

இப்போதும் அப்படியே நடந்திருக்கிறது. அதனாலேயே கமல் பேசும்போது, நீங்களே பல கதைகளைச் சொல்கிறீர்கள் அது நன்றாகவும் இருக்கிறது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படம் பற்றிய செய்திகள் என்றால் வாசகர்கள் விரும்பிப்படிக்கிறார்கள் என்பதாலேயே நிறையச் செய்திகள் எழுதப்படுகின்றன. இதைப் புரிந்துகொண்ட கமல் இதைத் தடுக்க வேண்டுமானால் நாமே பேசுவதுதான் சரி என்று நினைத்துப் பேசிவிட்டார்.

இப்போது ரஜினி படம் பற்றியும் இதேபோல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் ரஜினி தரப்பிலிருந்து இதுபோல் எந்த அறிவிப்பையும் அவர்கள் கொடுக்கவில்லை. அவர்களே சொல்லிவிட்டால் யூகங்கள் செய்திகளாகாது என்பதை ரஜினி படக்குழுவினர் புரிந்துகொள்ள மறுப்பது ஏனோ?

Saturday, May 16, 2015

அன்பே சிவம் கூட்டணியை மறுபடியும் உருவாக்கும் கமல் - தூங்காவனம் படத்திற்கு..?

அன்பே சிவம் படம் பார்த்தவர்களுக்கு, கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோயின் எனும் அளவுக்கு கமலை ஒருதலையாய் காதலிக்கும் உமா ரியாஸை மறந்திருக்க முடியாது.

அதுவும், கமல் வேறு பெண்ணை காதலிப்பது தெரிந்து, உமா பொறுமும் அந்தக் காட்சி அத்தனை இயற்கையாக அமைந்திருக்கும். ஆனால் அதன் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் பெரிய பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.

இப்போது மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அடுத்து தான் நடிக்கும் தூங்கா வனம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உமா ரியாஸை அழைத்துள்ளாராம் கமல்.

கமலின் தீவிர ரசிகைகளுள் ஒருவர் உமா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்க, த்ரிஷா, அனைகா, மனீஷா கொய்ராலா, பிரகாஷ் ராஜ் உடன் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜூனில் படம் தொடங்குகிறது.

கைவிட்ட சினிமா கட்டிடம் கட்டப்போன கதாநாயகி!

கனவு தொழிற்சாலையான சினிமா எல்லோரையும் கடைசி வரை காப்பாற்றும் என்று சொல்ல முடியாது. சினிமா கைவிட்டாலும் இருக்கவே இருக்கிறது சீரியல் என்று சின்னத்திரைக்கு வந்து ஜொலிக்கும் நாயகிகள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அதுவும் கை கொடுக்கவில்லையா இருக்கவே இருக்கிறது. பியூட்டி பார்லர், பேஷன் ஜூவல்லரி ஷாப், ஜவுளிக்கடை என்று செட்டில் ஆகிவிடுவார்கள். சில நடிகைகளோ தொழிலதிபரைப் பார்த்து திருமணம் செய்து கொண்டு காணாமலே போய்விடுவார்கள். ஒருசிலர் அரசியலில் குதித்து அவ்வப்போது பிரசாரத்திற்கு வந்து போவார்கள்.

நம்முடைய நாயகியின் கதையோ வேறு. ஒளி ஓவியரின் படத்தில் வண்ண வண்ணமாய் அறிமுகமானார். அழகான நாயகன்... இரண்டு நாயகி என்ற அந்த படத்தில் நாயகியை மேக் அப் இல்லாமலேயே நடிக்க வைத்தார் ஒளி ஓவியரான இயக்குநர்.

ஒரு நடிகை இயக்குநருடனேயே செட்டில் ஆகிவிட்டார். சீரியலிலும் வந்து போனார். ஆனால் நம்முடைய நாயகியின் கதையோ வினோதமானது. சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து அக்கா, அண்ணி கதாபாத்திரம் மட்டுமே கிடைத்தது. அதனால் சீரியல் பக்கம் கரை ஒதுங்கினார். சின்னத்திரையிலும் சொல்லிக்கொள்ளும்படியாக வாய்ப்புகள் அமையவில்லை. அவரது பெயரில் சில நடிகைகள் வந்து போனார்கள்.

நம் நடிகையோ நல்ல பில்டராக பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். சும்மா ஏன் இருக்கவேண்டும்? கட்டிடம் கட்டி வித்தால் கையில் நாலு காசாவது பார்க்கலாம் என்று கணவர் கொடுத்த ஐடியாவை கேட்டு கட்டுமான தொழிலில் காலூன்றி விட்டாராம். சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இவர் கட்டி வரும் கட்டிடங்கள் நடிகையின் பேர் சொல்கிறதாம். சின்னத்திரை நடிகை சங்கத்தின் தலைவிக்கு இவர்தான் கட்டிட காண்டிராக்டராம்.

மாஸ் படத்தின் கதை மற்றும் ரகசியங்களை கூறிய சூர்யா

சூர்யா நடிப்பில் மே 29ம் தேதி மாஸ் திரைப்படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படம் குறித்து சமீபத்தில் தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றில் இவர் பேட்டியளித்துள்ளார்.

இதில் ‘மாசிலாமணி, ஷக்தின்னு எனக்கு இரட்டை வேடம். மாசிலாமணியோட சுருக்கமான பெயர் ‘மாஸ்’, குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் அவனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் திடீர் திருப்பங்கள். அவை அவனை எங்கங்கே கூட்டிக் கொண்டுபோய் நிறுத்துகின்றன என்பதுதான் படத்தின் மையக்கதை’ என கூறியுள்ளார்.

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே மாஸ் ஹிட்டாக, படத்தின் எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்து விட்டது.

மலையாள ரீமேக் படத்தைக் குறிவைத்திருக்கும் ரஜினிகாந்த்...?

மலையாளத்தில் வெற்றியடைந்த த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் கமல் நடித்து வருகிறார். த்ரிஷ்யம் படம் போலவே கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி வெற்றியடைந்த மலையாளப்படம் பாஸ்கர் த ராஸ்கல். மம்முட்டி நயன்தாரா நடித்த இந்தப் படத்தை சித்திக் இயக்கி இருந்தார். பாஸ்கரன் பிள்ளை என்ற தொழில் அதிபரைப்பற்றிய கதை இது. பாஸ்கர் த ராஸ்கல் படத்தைப் பார்த்த ரஜினிக்கு அந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்கும் எண்ணம் வந்திருக்கிறது. உடனடியாய் அந்தப் படத்தின் ரைட்ஸை வாங்க ஏற்பாடு செய்திருக்கிறார். ஏற்கனவே அதை தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கி வைத்திருப்பது தெரிய வர, அவரை அழைத்துபேசி இருக்கிறார் ரஜினி.

கம்பீரம், தென்காசிப்பட்டணம், சதுரங்கம் படங்களைத் தயாரித்து தற்போது நலிவுற்று இருக்கும் துரைராஜ், பாஸ்கர் த ராஸ்கல் ரைட்ஸை தர முடியாது. வேண்டுமானால் நீங்கள் நடியுங்கள்.. நான் தயாரிக்கிறேன் என்று சொல்ல, ரஜினியும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பெரும் தொகையை பைனான்சியரிடமிருந்து வாங்கி ரஜினிக்கு அட்வான்ஸ் கொடுக்கத் தயாராகி இருக்கிறார். இதற்கிடையில் பா.ரஞ்சித், ரஜினியின் அடுத்தப் படத்தின் கால்ஷீட்டை வாங்கிவிட்டார். இதனால் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறாராம் எஸ்.எஸ்.துரைராஜ்.

இளைய தளபதி குங்பூ சண்டைப்போட்டா நல்லாவாயிருக்கம்...?

இளைய தளபதி விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் படம் புலி. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஜுன் 22ம் தேதி இவரின் பிறந்தநாளான அன்று வரும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள ஒரு கோவிலில் முடிந்துள்ளது. ஏற்கனவே விஜய் இப்படத்திற்காக குங்பூ கலையை பயின்றார் என கூறப்பட்டது.

தாய்லாந்தில் உள்ள கோவில் ஒன்றில் பிரமாண்ட சண்டைக்காட்சிகளுடன் தான் படப்பிடிப்பு முடிந்திருக்கும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது. தாய்லாந்து நாட்டில் குங்பூ கலை மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, May 15, 2015

36 வயதினிலே – சினிமா விமர்சனம் - ஜோதிகா பழைய ஜோதிகாவாக மாறினாரா?

ஜோதிகா அரசு பணியில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ரகுமான் எப்.எம். வானொலியில் முக்கிய பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகளான அமிர்தா பள்ளியில் படித்து வருகிறாள்.

ஜோதிகா 36 வயது நிரம்பியும் அப்பாவியாகவும், ரொம்பவும் வெகுளித்தனமாகவும் இருக்கிறார். இது அவரது கணவரான ரகுமானுக்கு பிடிப்பதில்லை. அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜோதிகா மீது எந்த மதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.

இதற்கிடையில் தான் பார்க்கும் வேலை பிடிக்காததால் அயர்லாந்து சென்று அங்கு வேலை பார்க்க எண்ணுகிறார். குடும்பத்துடன் அயர்லாந்து செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கிறார்.

இந்நிலையில் ஒருநாள் ஜோதிகாவின் மகள் படிக்கும் பள்ளிக்கு குடியரசுத்தலைவர் வருகை தருகிறார். அப்போது அவரிடம் தன்னுடைய அம்மா, தங்களிடம் ஒரு கேள்வி கேட்கச் சொன்னார் என்று ஒரு கேள்வி கேட்கிறாள் அமிர்தா.

அந்த கேள்வியை கேட்டு வியக்கும் குடியரசு தலைவர், அவளிடம் உன் அம்மாவை என்னை வந்து பார்க்கச் சொல். அவரிடம் இதற்கு விடை கூறுகிறேன் என்று சொல்லி அனுப்புகிறார்.

உடனே ஜோதிகாவை சந்திக்க குடியரசுத்தலைவர் விருப்பப்படுகிறார் என்ற செய்தி நாடு முழுவதும் பரவிவிடுகிறது. ஜோதிகாவுக்கு இதில் கர்வம் இருந்தாலும் கொஞ்சம் பயமும் இருக்கிறது. அவ்வாறு பயம் கலந்த பீதியுடன் தன்னை சந்திக்கும் ஜோதிகாவை குடியரசுத்தலைவர் நலம் விசாரித்ததுமே, ஜோதிகா மயங்கி கீழே விழுந்து விடுகிறார்.

இது அங்குள்ள அனைவருக்கும் சிரிப்பலையை உண்டாக்குகிறது. இச்சம்பவம் நாடு முழுவதும் பரவிவிடுகிறது. சமூக வலைத்தளங்களில் ஜோதிகாவை கேலி செய்து, நிறைய கருத்துக்களை வெளியிடுகின்றனர். இதனால் ஏற்கனவே ஜோதிகா மீது மதிப்பு இல்லாமல் இருந்து வரும் கணவர் ரகுமானுக்கும், பள்ளியில் கிண்டலுக்கு உள்ளாவதால் மகள் அமிர்தாவுக்கும் ஜோதிகா மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.

பள்ளியில் தொடர்ந்து நண்பர்கள் கிண்டலடிப்பதால் பள்ளிக்கு செல்ல மறுக்கிறாள் அமிர்தா. இதற்குள் அயர்லாந்து வேலைக்காக விண்ணப்பம் செய்திருந்த ரகுமானுக்கு அங்கு செல்ல விசா கிடைத்துவிடுகிறது. கூடவே அரவது மகளுக்கும் விசா கிடைத்துவிடுகிறது.

ஆனால் ஜோதிகாவுக்கு மட்டும் விசா கிடைக்கவில்லை. ஜோதிகாவுக்கு 36 வயது ஆகிவிட்டபடியால் 36 வயது நிரம்பிய பெண் அயல்நாட்டில் வேலைக்கு செல்ல முடியாது என்ற விதிமுறையின் படி இவருக்கு மட்டும் விசா ரத்தாகிவிடுகிறது.

எனவே ஜோதிகாவை மட்டும் தனியாக விட்டுவிட்டு ரகுமானும், அவரது மகளும் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்கள். இந்த நிலையில்தான் ஜோதிகாவின் கல்லூரி தோழியான அபிராமி ஜோதிகாவை சந்திக்கிறார். அவளது நிலைமையைக் கண்டு வருத்தமடைகிறாள்.

ஆனால் உண்மையில் ஜோதிகா கல்லூரி பருவத்தில் புரட்சிகரமான, துடிதுடிப்பான பெண்ணாகவும், மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் பெண்ணாகவும் இருந்திருக்கிறார். ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு கணவன், குழந்தை என ஆனபிறகு அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அடக்க ஒடுக்கமாக மாறிவிட்டாள். ஆனால் அது அவளை எந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பதை அபிராமி அவளுக்கு புரிய வைக்கிறார்.

மேலும், அவளுடைய தூண்டுதலான வார்த்தைகளால்தான் தான் பெரிய நிலையில் இருப்பதையும் அபிராமி, ஜோதிகாவிடம் எடுத்துக் கூறுகிறார். மீண்டும் பழைய ஜோதிகாவாக மாற வேண்டும் என்று அவளை வற்புறுத்துகிறார்.

இறுதியில் ஜோதிகா பழைய ஜோதிகாவாக மாறினாரா? பிரிந்துபோன இவரது குடும்பம் இவருடன் மீண்டும் சேர்ந்ததா? குடியரசுத்தலைவரிடம் இவர் கேட்ட கேள்வி என்ன? என்பதே மீதிக்கதை.

36 வயது நிரம்பிய பெண்ணாக ஜோதிகா பளிச்சிடுகிறார். தலையில் சிறிது நரைத்த முடியை வைத்து இவரை மற்றவர்கள் கிண்டலடிக்கும் காட்சிகளில் அழகான முகபாவணைகளை கொடுத்திருக்கிறார்.

மேலும், தான் குடியரசுத்தலைவரை சந்திக்கப் போவதை மற்றவர்களிடம் சொல்லி பந்தா செய்யும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்தாலும், அதே பளபளப்பு, துள்ளலான நடிப்பு, வித்தியாசமான முகபாவணைகள் என எதையும் மறந்துவிடாமல் அதே இளமையுடன் நடித்து அனைவரையும் ஈர்த்திருக்கிறார்.

படம் முழுக்க ஜோதிகாவுக்குத்தான் நடிக்க வாய்ப்பு அதிகம் என்றாலும், அவ்வப்போது சிறுசிறு காட்சிகளில் வந்துபோகும் ரகுமான், நாசர், அபிராமி, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, டெல்லி கணேஷ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை செவ்வனே கொடுத்திருக்கிறார்கள். ஜோதிகாவின் மகளாக நடித்திருக்கும் அமிர்தாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் என்றாலும், தமிழுக்கு ஏற்றார்போல் அழகான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரோஜன் ஆண்ட்ரூவ்ஸ். ஆனால், படம் மெதுவாக செல்வதுதான் படத்திற்கு சற்று தொய்வைத் தருகிறதே தவிர, காட்சிகள் ஒவ்வொன்றையும் ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘வாடி ராசாத்தி’ பாடல் அசத்தல். பின்னணி இசையிலும் கோலோச்சியிருக்கிறார். படத்திற்கு மற்றொரு பெரிய பலம் திவாகரனின் ஒளிப்பதிவு. இவரது கேமரா கண்கள், ஒவ்வொரு காட்சியையும் நம்மை படத்தோடு ஒன்றும்படி செய்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் ‘36 வயதினிலே’ பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

36 வயதினிலே திரை விமர்சனம்

சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஜோதிகா, ரஹ்மான், தேவதர்ஷினி ஆகியோர் நடிப்பில் ரேஷன் ஆண்ட்ரூஸ் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் படம் 36 வயதினிலே. இது மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழ் பதிப்பாகும்.

36 வயதான ஜோதிகா அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவரான ரஹ்மானுக்கு நீண்ட போராட்டத்துக்கு பின் அயர்லாந்தில் வேலை கிடைக்கிறது. அவரது கணவர் மற்றும் மகளுடன் அயர்லாந்து செல்ல அவரும் வேலைக்கு முயற்ச்சி செய்ய வயதை காரணம் காட்டி அவரை நிராகரிக்க, அவரது மகள் இதனால் ஏமாற்றமடைகிறாள். இதற்கிடையே அவருக்கும் அவர் கணவருக்கும் ஏற்படும் சின்ன சின்ன சண்டையில் அவர் வயதை காரணம் காட்டி அவமானப்படுத்த படுகிறார். ஒரு கட்டத்தில் ஜோதிகாவை விட்டு கணவரும் மகளும் அயர்லாந்துக்கு பிரிந்து போக, தனிமையில் தான் கல்லூரி காலத்தில் எப்படி இருந்தோம், ஆனால் இப்போது ஏன் இப்படியிருக்கிறோம் என அவர் என்ன, அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றமே மீதி கதை.

இந்திய பெண்கள் திருமணத்திற்க்கு பின் எப்படி தனது அடையாளங்களை இழந்து, தனது வாழ்நாள் அனைத்தையும் தனது குடும்பத்திற்க்கு அர்பணித்து, தனது கணவர் மற்றும் குழந்தைகளால் ஆதிக்கம் செலுத்த படுகிறாள் என்பதை அச்சு அசலாக படம் பிடித்து காட்டியதற்க்கு கதாசரியர் மற்றும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். விஜி வசனம் ஒவ்வொன்றும் எதார்தம் கலந்த நகைச்சுவையுடன் நச்சென இருக்கிறது. சந்தோஷ நாராயணன் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளன. பின்னனி இசையிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் வெள்ளி திரையில் ஜோதிகா, தனது எதார்த்த நடிப்பின் மூலம் தான் என்றும் சிறந்த நடிகை என நிரூபிக்கிறார். அவரது உடல்மொழியாகட்டும், முகபாவங்களாகட்டும் ஜோதிகாவை தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக இதை செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ரஹ்மான், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், டெல்லி கணேஷ் என ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

மொத்ததில் 36 வயதினிலேவை மீண்டும் நடிக்க வர தேர்ந்தெடுத்த ஜோதிகாவிற்க்கு மிகச்சரியாக அமைந்துள்ளது.

36 வயதினிலே – வாடி ராசாத்தி

Thursday, May 14, 2015

ரஜினி பெயரை மோசடியாக பயன்படுத்திய அந்த பைனான்சியரை விட மாட்டேன்- கஸ்தூரி ராஜா

ரஜினி பெயரை மோசடியாகப் பயன்படுத்தி, வழக்குத் தொடர்ந்து என்னை அலைக்கழித்த பைனான்சியர் முகுந்த் போத்ரா மீது வழக்குத் தொடருவேன் என்று இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

திரைப்படங்களுக்கு பைனான்சியராக இருக்கும் முகுந்த் போத்ரா அறுபத்தைந்து லட்சம் கஸ்தூரி ராஜாவிற்கு கடன் கொடுத்ததாகவும் அதை அவர் திருப்பித் தரவில்லை என்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

அதற்காக போத்ரா கொடுத்த ஆவணங்கள், போத்ராவால் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்று புகார் நிராகரிக்கப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அங்கும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் ஜார்ஜ் டவுண் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். அங்கும் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த கஸ்தூரிராஜா, "சுமார் மூன்று வருடங்களாக என்னைப் பற்றி அவதூராக செய்திகளைப் பரப்பியும் வருகிறார். அடுத்தடுத்து பொய்வழக்குத் தொடர்ந்ததால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் என் குடும்பத்தைச் சேர்ந்த பிரபலமானவரை (ரஜினிகாந்த்) பயன்படுத்தி அதன் மூலம் என்னை மிரட்டி பணம் பறிக்கத் திட்டமிட்டார். இதனால் பொய்வழக்குப் போட்ட அவர் மீது சட்டப்படி மானநஷ்ட வழக்கைத் தொடர்வேன்," என்றார்.

சுடுகாட்டு பக்கத்துல லவ் லட்டரோட திரிவாய்ங்க… பார்த்துக்கங்க வெங்கட் பிரபு!

‘ஆங்கில டைட்டிலா இருக்கே?’ன்னு பொதுநலப் பிரியர்கள், சமூக சிந்தனையாளர்கள், மொழிப்போர் தியாகிகள் எல்லாரும் கூடி நின்று கேட்பதற்கு முன்பே சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு! ‘மாஸ்னா அது இங்கிலீஷ் மாஸ் இல்லீங்க. தமிழ்தான்! படத்துல சூர்யா பேரு மாசிலாமணி. எல்லாரும் அவரை மாஸ் மாஸ்னு கூப்பிடுவாங்க. அதையே டைட்டிலா வச்சுட்டோம்’ என்றார். (க்ளியர்?)

சரி, படம் உருவான கதை என்ன? ‘பொதுவா நம்ம படத்துல கதைன்னு ஒண்ணு இருக்குமா? (லந்து!) ஆனால் இந்த படத்தின் ‘நாட்’டை ஒருநாள் ரொம்ப சாதாரணமா ஞானவேல்ராஜாகிட்ட சொன்னேன். ‘நல்லாயிருக்கு. சூர்யாவுக்கு இதை சொல்லலாமே’ன்னு சொன்னார். அங்க ஆரம்பிச்சுது டென்ஷன். சூர்யா மாதிரி ஒரு மாஸ் ஹீரோ பண்ணும்போது, இப்ப நாம சொன்ன ‘நாட்’ தாங்காதுன்னு தோணுச்சு. என்னுடைய முன்னாள் உதவி இயக்குனர்களும், இப்போ இயக்குனர்களா இருக்கிறவங்களையும் வரவழைச்சேன். தெலுங்குல ராஜமவுலிகிட்ட வொர்க் பண்ணுற ஒருத்தரை கூப்பிட்டுகிட்டேன். ரொம்ப சீரியஸ்சா நாங்க பண்ணின கதைதான் இந்த மாஸ். கடைசியில பார்த்தா… முதல்ல நான் ஞானவேல்ராஜாகிட்ட சொன்னா நாட் இதுல வரவேயில்ல’.

‘நான், சூர்யா, வெங்கட்பிரபு, யுவன், எல்லாம் ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம். படிக்கும்போது கூட கொஞ்சம் ரிசர்வ்டாதான் இருப்பார் சூர்யா. இப்ப படம் பண்ண போறதுக்கு முன்னாடியும் அப்படிதான் இருப்பார்னு நினைச்சேன். ஆனால் ஸ்பாட்ல அவ்வளவு ப்ரண்ட்லியா இருந்தார். ஷாட் முடிஞ்சதும் எப்பவும் கேரவேனுக்கு போய்டுவாருன்னு சொன்னாங்க. அவர் போகல… எங்க கூடவே உட்கார்ந்து நாங்க அடிக்கிற அரட்டைய ரசிக்க ஆரம்பிச்சிட்டார். வழக்கமா எனக்கு ஒளிப்பதிவாளரா இருக்கிறவர் இந்த படத்தில் இல்ல. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செஞ்சுருக்கார். நான் பண்ணிய படங்கள்லேயே ரொம்ப கலர்புல்லான படம் இதுதான். தமிழ்சினிமா இப்போ ஆவி, பேய் சீசன்ல இருந்தாலும், இந்த ஆவிக் கதை இதுவரை வராத கோணத்துல இருக்கும்’ என்றார்.

‘நான் கேரவேனுக்கு போகாததுக்கு ஒரு காரணம் இருக்கு. ஷுட்டிங் ஆரம்பிச்ச நாளில் இருந்தே இவங்க வேலை செய்யுற விதம் எனக்கு பயமாயிருச்சு. எந்நேரமும் அரட்டையடிச்சுகிட்டே இருக்காங்களே… வேலை நடக்குமான்னு பயம் வந்துருச்சு. இவங்க ஒழுங்கா வேலை செய்யுறாங்களான்னு கண்காணிக்கதான் நான் கேரவேனுக்கு போகாமல் ஸ்பாட்லேயே உட்கார்ந்துட்டேன்’ என்றார் சூர்யா. (பார்றா) படத்தில் சூர்யாவுக்கு ஜோடி நயன்தாரா. அவங்களுக்கும் பேய் கேரக்டரா என்றால், யூனிட்டே மந்திரிச்சு விட்டது போல கமுக்கமாக இருக்கிறது.

நயன்தாராவையெல்லாம் பேயா காண்பிச்சா, அதற்கப்புறம் எல்லாரும் சுடுகாட்டு பக்கத்துல லவ் லட்டரோட திரிவாய்ங்க… பார்த்துக்கங்க வெங்கட் பிரபு!

Wednesday, May 13, 2015

எலி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏன் நின்றது? உண்மையை கூறிய வடிவேல்

வடிவேல் சில அரசியல் பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்த தெனாலிராமன் படமும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் விரைவில் இவர் நடிப்பில் வெளிவரும் எலி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடப்பதாக இருந்து ரத்தானது. அன்றைய தினம் ஜெயலலிதா அவர்களின் தீர்ப்பு நாள் என்பதால் தான் இந்த முடிவு என கூறப்பட்டது.

ஆனால், இந்த தகவலை முற்றிலுமாக வடிவேல் மறுத்துள்ளார். மேலும், தான் அம்மாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அன்றைய தினர் ட்ரைலர் வர தாமதம் ஆனதால் தான் ரத்தானது என விளக்கம் அளித்துள்ளார்.

மீண்டும் படப்பிடிப்பில் சல்மான்: குளு குளு காஷ்மீரில் கரீனாவுடன் டூயட்

காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் கிடைத்த 5 ஆண்டுகள் சிறை தண்டனை சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் நடிக்க காஷ்மீர் சென்றுவிட்டார்.

இந்தி நடிகர் சல்மான் கான் 2002ம் ஆண்டில் மும்பை பந்த்ரா பகுதியில் குடிபோதையில் காரை ஓட்டி ஒருவரை கொன்ற வழக்கு 13 ஆண்டுகளாக மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பையொட்டி காஷ்மீரில் பஜ்ரங்கி பாய்ஜான் படப்பிடிப்பில் இருந்த சல்மான் மும்பை வந்தார்.

மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த 5 ஆண்டு தண்டனையை உயர் நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து சல்மான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள காஷ்மீர் சென்றுவிட்டார்.

கபீர் கான் இயக்கி வரும் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது.

சல்மான் காஷ்மீரில் 5 நாட்கள் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். கபீர் கானும், சல்மான் கானும் ஏக் தா டைகர் வெற்றிப் படத்தை அடுத்து மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட பிறகு சல்மான் சோனம் கபூருடன் பிரேம் ரத்தன் தான் பாயோ படத்தில் நடிக்க உள்ளார்.

மாஸ் பேய் படம் தான், ஆனா எல்லோருக்கும் பிடிக்கும்” ஜாலியாக பேசிய சூர்யா!

வெங்கட்பிரபு படம் என்றாலே இளைஞர்களை மையப்படுத்திய  ஜாலி கலாய்  படமாகவே இருக்கும். அதிலிருந்து வேறுபட்ட படமாக உருவாகியிருக்கிறதாம் மாஸ். சூர்யா, நயன்தாரா நடிப்பில் மே 29ல் வெளியாகவிருக்கிறது.

படத்தைப் பற்றி ஒன்ரென்றாக அடுக்க ஆரம்பித்தார் சூர்யா, “ இந்தப்படத்தில் சிகரெட், மது அருந்துவது போன்ற காட்சிகள் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பாதிக்காத படம் தான் மாஸ். அதென்ன படத்தோட பெயர் “மாஸ்” அப்படினு கேட்டீங்கனா?, இந்தப்படத்துல என் பெயர் மாசிலாமணி, என்ன எல்லோரும் செல்லமா மாஸ்னு கூப்பிடுவாங்க. அதுனாலதான் படத்தோட பெயரும் மாஸ்.

அதுமட்டுமில்லாமல் இதுவரைக்கும் 40க்கும் மேற்பட்ட பேய் படங்கள் தமிழில் வந்துவிட்டது. ஆனால் இந்தப்படம் கொஞ்சம் வித்தியாசமா, எல்லோருக்கும் பிடிக்கிறமாதிரிதான் இருக்கும்”  என்று கூறினார் சூர்யா.

வெங்கட் பிரபு டீம்மே ஜாலியா இருப்பாங்க. எப்படி உங்களுக்கு செட் ஆனது என்று கேட்டதற்கு, ‘ நானும் ஜாலியான பையன் தாங்க. வெங்கட் பிரபு டீமே ஷூட்டிங் டைம்ல ஜாலியாதான் இருந்தாங்க. எனக்கே டவுட் ஆயிடுச்சி. உண்மையிலுமே ஷூட்டிங்  தான் போகுதானு டவுட் ஆயிடுச்சி. அதுக்காகவே கேரவேன்ல இருக்காம ஷூட்டிங் ஸ்பாட்லையே உக்காந்து என்ன நடக்குனு பார்த்திட்டு இருப்பேன்.

இந்தப்படத்திற்கு சிக்ஸ் பேக் ட்ரைப்பண்ணிருக்கீங்களானு கேட்டதற்கு, “ சிக்ஸ் பேக் வச்சாதான் படம் ஓடும் என்றெல்லாம் கிடையாது. கதை வித்தியாசமா இருக்கு. கண்டிப்பா கதைக்கே படம் ஹிட் அடிக்கும். நீங்க வேணா பாருங்களேன் என்று முடித்தார் சூர்யா.

அந்த இயக்குனரிடம் இருந்து மட்டும் போன் வரக்கூடாது- பயத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது இரண்டாம் கட்ட நடிகர்களில் முதல் வரிசையில் உள்ளவர். பல இயக்குனர்கள் இவரின் கால்ஷிட்டிற்காக தான் வெயிட்டிங்.

இந்நிலையில் இவரை சினிமாவில் மெரினா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ். இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் கேடி பில்லா கில்லாடி ரங்காவிலும் நடித்தார். இப்படத்தையும் பாண்டிராஜ் தான் இயக்கியிருந்தார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவாகார்த்திகேயன் இரண்டு படங்களிலும் குறைவான சம்பளத்தில் தான் நடித்து கொடுத்தாராம். ஆனால், தற்போது இவரின் சம்பளம் ரூ 5 கோடியை தாண்டுகிறதாம் . இந்த நேரத்தில் பாண்டிராஜ், சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையலாம் என்று முடிவெடுக்க, இவரோ பயத்தில் உறைந்து விட்டாராம். ஏனெனில் குருநாதர் என்பதால் சம்பளம் பற்றி பேச முடியது அல்லவா.

Tuesday, May 12, 2015

ரஜினிக்கு பட்டையை கிளப்பும் இசையை கொடுப்பாரா சந்தோஷ்?

இயக்குனர் ரஞ்சித்துக்கு ரஜினி என்ற ஜாக்பாட் குதிரையில் சவாரி செய்ய வாய்ப்பு கிடைத்த நிலையில் அதற்கான மற்ற பணிகளை ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் ரஜினி படம் என்றாலே படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை ரசிகர்கள் எந்தளவுக்கு எதிர்பார்ப்பார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

இதுவரை ரஹ்மான் கொடுத்த படையப்பா, முத்து படத்தின் பின்னணி இசை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. அது போல் சந்தோஷ் நாராயணனால் கொடுக்க முடியுமா என்ற கேள்விக்கு அவரது முந்தைய படங்களான ஜிகர்தண்டா, சூதுகவ்வும் போன்ற படங்களே சாட்சி.

அதிலும் தற்போது ரஜினி படம் என்பதால் பட்டையை கிளப்ப போகிறார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ரஜினி படத்துக்கான இசையமைப்பு பணிகள் மிக விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

‘நீயும் நானும் நிலவும் வானும்’ காதல் கவிதை - திரை விமர்சனம்

நாயகன் தனிஷ், நாயகி மடால்சாவை பார்த்தவுடன் காதலிக்கிறார். உடனே தன் காதலை மடால்சாவிடம் சொல்கிறார். ஆனால் மடால்சா, தனிஷின் காதலை ஏற்க மறுக்கிறார். இருந்தாலும் மடால்சாவை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் தனிஷ். ஒரு கட்டத்தில் தனிஷின் காதலை மடால்சா ஏற்றுக் கொள்கிறார்.

இருவரும் காதலித்து வருகின்றனர். ஒரு சமயத்தில் தனிஷின் பர்சில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்க்கிறார் மடால்சா. பின்னர் தனிஷ் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்திருப்பதை தெரிந்துக் கொள்கிறார். தன் காதலன் தனிஷ் தன்னிடம் இந்த விஷயத்தை மறைத்ததால் அவன் மீது கோபப்பட்டு காதலை வெறுக்கிறார்.

இறுதியில் மடால்சாவை தனிஷ் சமாதானம் செய்தாரா? தனிஷின் முன்னாள் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தனிஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல், சென்டிமென்ட், நடனம், ஆக்‌ஷன் என அனைத்திலும் தன் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் நித்தியிடம் காதல் செய்யும் காட்சிகளும், அவருடைய காதலுக்காக ஏங்கும் காட்சிகளையும் சிறப்பாக செய்திருக்கிறார்.

படத்தில் நாயகி மடால்சா சிறிதளவே வருகிறார். அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பிளாஷ்பேக்கில் வரும் நாயகி நித்திக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நித்தியும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் முக்கியமா, குடும்பம் முக்கியமா என்று நடிப்பில் வேறுபாடு காண்பித்திருக்கிறார். தனிஷ்-நித்தி நடனக்காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

காதல் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் திரிநாத ராவ் அதில் சுவாரஸ்யம் சேர்க்காமல் விட்டிருக்கிறார். பிளாஷ்பேக்கிலேயே அதிக காட்சிகளை நகர்த்திருக்கிறார். எல்லாருக்கும் முதல் காதல் என்று ஒன்று இருக்கும் என்றும், காதலில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான் என்ற கருத்தை ஆணித்தனமாக சொல்லியிருக்கிறார். காதல் காட்சிகள் ஏற்கனவே பழைய தமிழ் படங்களை ஞாபகப்படுத்தியிருக்கிறது. கொஞ்சம் சுவாரஸ்யம், கொஞ்சம் விறுவிறுப்போடு காட்சிகளை அமைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

சேகர் சந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக செய்திருக்கிறார். சாய் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘நீயும் நானும் நிலவும் வானும்’ காதல் கவிதை.

தமிழ் சினிமாவை வாழ வைக்கும் பேய்கள்

தமிழ் சினிமாவில் தற்போது கதை இருக்கிறதா என்று கேட்க மாட்டேன் என்கிறார்கள், மாறாக பேய் இருக்கிறதா என்றுதான் கேட்கிறார்கள். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவை தற்போது பேய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. வாரத்திற்கு நான்கு படங்கள் வெளிவந்தால் அதில் ஒரு படம் கண்டிப்பாகப் பேய்ப் படமாக அமைந்து விடுகிறது. முன்பெல்லாம் பக்திப் படங்களும், மிருகங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களும் தாய்மார்களை அதிகம் கவர்ந்து அவர்களை தியேட்டர் பக்கம் வரவைத்தன. இப்போது அந்த வேலையை பேய்ப் படங்கள் பத்திரமாக செய்து கொண்டிருக்கின்றன.

பேய் என்றால் பயம் என்றிருந்த காலம் போய், இப்போது பேய் என்றாலே பயமே இல்லாமல் போய் விட்டது என்று சொல்லுமளவிற்கு பேய்ப் படங்களை நகைச்சுவைப் படங்களாகவும் கொடுத்து சிறுவர், சிறுமியர்களையும் கவர்ந்து விட்டார்கள்.

தமிழ் சினிமாவில் இப்போதுதான் பேய்ப் படங்கள் வருகிறது என்று நினைக்க வேண்டாம். அந்தக் காலத்திலேயே பேய்ப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும், விட்டலாச்சார்யா காலத்தில்தான் தெலுங்கிலும், தமிழிலும் அதிகமான பேய்ப் படங்கள் வந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் 'ஜகன்மோகினி' படம் அந்த அளவிற்கு ரசிகர்களை பயமுறுத்தியது. வெறும், காமிரா ஜாலம் மூலமே பல திகிலான காட்சிகளை உருவாக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் விட்டலாச்சார்யா.

அவருடைய பட தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு சில பேய்ப் படங்களே வந்துள்ளன. ரஜினிகாந்த், லதா நடித்த 'ஆயிரம் ஜென்மங்கள்', கமல்ஹாசன் நடித்த 'நீயா, சிகப்பு ரோஜாக்கள்,' கார்த்திக் நடித்த 'ஆயிரம் நிலவே வா', மோகன் நடித்த 'உருவம்', ராஜா, வைஷ்ணவி நடித்த 'வா அருகில் வா', அர்ஜுன், நளினி நடித்த 'யார்', நிழல்கள் ரவி, சாதனா நடித்த 'மை டியர் லிசா', மோகன், நளினி நடித்த 'பிள்ளை நிலா', ராகவா லாரன்ஸ் நடித்துள்ள “முனி, காஞ்சனா, காஞ்சனா 2', ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி, அனுஷ்கா நடித்த 'அருந்ததி', மிஷ்கின் இயக்கிய 'பிசாசு', மாதவன், நீது சந்திரா நடித்த 'யாவரும் நலம்', பிரசாந்த், மீனா நடித்த 'ஷாக்', பிரியாமணி நடித்த 'சாருலதா', மற்றும் கடந்த சில வருடங்களில் வெளிவந்த 'பீட்சா, யாமிருக்க பயமே, அரண்மனை, ர', சமீபத்தில் வெளிவந்த 'டார்லிங்' என 50க்கும் குறைவான முக்கியமான படங்களே இதுவரை பேசப்பட்டுள்ளன. இந்தப் பேய்ப் படங்களில் இரண்டு பொதுவான விஷயங்கள் இரண்டு இருக்கும். தன் மரணத்திற்குக் காரணமானவர்களை அந்தப் பேய் பழி வாங்குவது ஒன்று, மற்றொன்று அந்தப் பேய் ஒரு பாழடைந்த வீட்டில் மட்டுமே இருக்கும். அந்த இரண்டு விஷயங்களை மட்டுமே வைத்து இதுவரை எத்தனையோ கதைகளைப் படைத்து விட்டார்கள் நமது இயக்குனர்கள். ஆனாலும், ஒவ்வொரு படமும் திகிலை ஏற்படுத்துவதில் சளைக்காமல் இருந்திருக்கிறது.

இருட்டறைக்குள் எங்கு பேய் இருக்கிறது என்பது , சத்தம் போடும் கதவுகள், ஜன்னல்கள், கிரீச்சிடும் கட்டில் நாற்காலி, திடீரென எதிரே ஒரு உருவம் வந்து நிற்பது, கண்ணாடியில் திடீரென யாரோ தோன்றி மறைவது, வேறு எந்த சத்தமும் இல்லாத 'பின்-டிராப்' சைலன்ட்டில் வெறும் கொலுசு சத்தம் மட்டும் கேட்பது, வாய் விட்டு சிரிக்கும் கலகல சிரிப்புச் சத்தம் போன்ற விஷயங்களை மட்டுமே வைத்து வசூலை அள்ளி வருகின்றன பேய்ப் படங்கள்.

இந்த மாதிரியான படங்களுக்கு கதை தேவையில்லை, நல்ல திரைக்கதை இருந்தாலே போதும். இதுவரை வந்த படங்களைப் பார்த்து விட்டு, அதில் இது வரை இல்லாத அளவிற்கு வேறு ஏதாவது புத்தம் புது காட்சிகளை யோசித்தாலே போதும், ஒரு அருமையான பேய்ப் படம் ரெடி என்றாகிவிட்டது.

எப்படியும் இந்த 2015ம் ஆண்டில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேய்ப் படங்கள் வந்து விடும் போல இருக்கிறது. இந்த மாதத்திலேயே சூர்யா நடித்துள்ள 'மாஸ்', ஆவி குமார், டிமான்டி காலனி ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அடுத்தடுத்து 'கோப்பெருந்தேவி, ஓம் சாந்தி ஓம், மாயா, சௌகார்பேட்டை' போன்ற பேய்ப் படங்களும் வர உள்ளன.

இவை மட்டுமல்லாமல் சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் பேய்க் கதைகளுடன் படமாகி வருகின்றன. இவை ஓரளவிற்கு வெளியில் தெரிந்த படங்கள், இன்னும் தெரியாமல், சத்தமில்லாமல் பல படங்கள் உருவாகி வருகின்றன.

'மாஸ்' போன்ற பெரிய படத்தில் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களே பேய்ப் படங்களில் நடிக்க வந்திருப்பதும் ஆச்சரியமான ஒன்றுதான். இந்தப் படம் ஹிட் ஆகிவிட்டால், மற்ற முன்னணி நடிகர்களும் பேய்ப் படங்களைத் தேடி ஓட ஆரம்பித்து விடுவார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எவ்வளவு பேய்ப் படங்கள் வந்தாலும் இன்னமும் தொழில் நுட்பத்திலும், கிராஃபிக்ஸ் காட்சிகளிலும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக என்று சொல்லுமளவிற்கு எந்தப் படமும் வரவில்லை. இந்தக் குறையும் சீக்கிரமே நிவர்த்தி செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

சமீபத்தில் வெளிவந்த 'டார்லிங், காஞ்சனா 2' ஆகிய இரண்டு பேய்ப் படங்கள்தான் இதுவரை இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் அனைவருக்குமே லாபத்தை அள்ளிக் கொடுத்த படங்கள் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. ஆக, பேய்கள்தான் தற்போது தமிழ் சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.

அதனால், இன்னும் கொஞ்ச நாளைக்கு தமிழ் சினிமாவைப் பிடித்திருக்கும் பேய்ப் பட மோகத்தை எந்த இடத்திற்கும் சென்று விரட்டியடிக்க முடியாது என்றே தோன்றுகிறது

Monday, May 11, 2015

தனது வெற்றி கூட்டணியை மாற்றிய ஷங்கர்?

ஷங்கர் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். இவரின் பெரும்பாலான படங்களுக்கு சுஜாதா தான் கதை மற்றும் வசனம் எழுதியவர்.

ஆனால் இவரின் மறைவு ஷங்கரை வெகுவாக பாதித்துள்ளது. இதனாலேயே ஐ படத்தை இவரால் ஒரு முழுமையான பொழுதுப்போக்கு படமாக கொடுக்க முடியவில்லை.

தற்போது ஷங்கர் அடுத்து ரஜினியுடன் இணையும் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை கதை உதவி செய்ய நியமித்ததாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானக்கு பதிலாக அனிருத் தான் இசை என்று கிசுகிசுக்கப்படுகிறது.

Sunday, May 10, 2015

அவம் படத்திற்காக பாடினார் கமல்

கமலஹாசன் தான் நடிக்கும் படம் தவிர மற்ற படங்களில் பாடுவது மிகவும் அபூர்வமாக நடக்கும் ஒரு நிகழ்வு. அப்படி ஒரு நிகழ்வு அவம் படத்தில் நடந்திருக்கிறது. கவுரவ், கார்த்திக் வில்வா கிரீஷ், காவ்யா ஷெட்டி, நடித்துள்ள அவம் படத்தை விஜய் வில்வா கிரிஷ் இயக்கியுள்ளார். கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசை அமைத்துள்ளார்.

படத்திற்காக மதன் கார்க்கி "காரிருள்..." என்று துவங்கும் பாடலை எழுதினார். இதனை கமல் பாடினால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரும், தயாரிப்பாளரும் கருதி உள்ளனர். இசை அமைப்பாளர் சுந்தர மூர்த்தியின் தந்தை குமார் கமலை சந்தித்து மகன் இசையில் பாட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்க அதனை கமல் உடனே ஏற்று பாடிக் கொடுத்துள்ளார். அந்த பாடல் இன்று (மே 10) வெளியிடப்பட்டது.

Saturday, May 9, 2015

இது 'விஐபி 2' குடும்பம்...!

தனுஷ், அமலா பால் நடிக்க, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' படம் மாபெரும் வெற்றி பெற்றது. துவண்டு கிடந்த தனுஷின் மார்க்கெட்டையும் தூக்கி நிறுத்தியது.

அடுத்து தனுஷ் நடித்த 'அனேகன்' படம் வெளிவந்தாலும் அது 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றியைத் துளிக் கூட நெருங்கவில்லை. இதனால் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் முடிவில் தனுஷ் இறங்கினார்.

தனுஷ், இயக்குனர் வேல்ராஜ், அனிருத் ஆகிய முதல் பாகத்தின் வெற்றி நாயகர்களுடன் இரண்டாம் பாகத்தில் சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

மேலும் 'வேலையில்லா பட்டதாரி'-யில் தனுஷின் அப்பா, அம்மாவாக நடித்திருந்த சமுத்திரக்கனி, சரண்யா ஆகியோரின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. இந்த முறை அப்பா, அம்மாவையும் மாற்றிவிட்டார் தனுஷ்.

அவருடைய அப்பாவாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும், அம்மாவாக ராதிகாவும் நடித்துள்ளனர். இந்தக் குடும்பமும் பார்ப்பதற்கு நடுத்தரக் குடும்பம் போலவே மிகவும் யதார்த்தமாக உள்ளது.

இந்த அழகுக் குடும்பத்தில் வெள்ளைப் புறாவாக சமந்தாவும் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணைய தளங்களில் பரவி வருகிறது. பார்ப்பதற்கே மிகவும் பாந்தமாக இருக்கும் இந்த விஐபி 2 குடும்பம், மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம் பெறப்போவது உறுதி என்பதை இப்போதே சொல்லிவிடலாம்.